பிரசவத்துக்கு முன் இந்த 8 விஷயங்களை செஞ்சா சிரமம் இல்லாம குழந்தை பிறக்கும்...
எல்லாருக்கும் முதல் குழந்தை என்றால் போதும் சந்தோஷத்தையும் கனவையும் கண்ணில் வைத்துக் கொண்டு காத்திருப்போம். அதிலும் ஒரு பெண்ணுக்கு தலைப்பிரசவம் என்பது மறுபிறவி என்பார்கள். பத்து மாதம் ஒரு குழந்தையை சுமந்து பிரசவ வலியையும் தாங்கி குழந்தையை பெத்தெடுக்க வேண்டும் என்றால் மன வலிமையும் அதே நேரத்தில் உடல் வலிமையும் ஒரு பெண்ணுக்கு அவசியமாகிறது.
அப்படிப்பட்ட பிரசவ காலத்தை எளிதாக மாற்ற சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. வாங்க பார்க்கலாம்.
பாஸிடிவ் ஆக இருங்கள்
பிரசவத்திற்கு தயாராகுவதற்கு உங்கள் உடல் நிலையும் மன நிலையும் மிகவும் முக்கியம். எனவே உங்களுக்கு பிரசவத்தை பற்றிய பயம் இல்லாமல் பாஸிடிவ் ஆக அதை அணுகினாலே போதும் பிரசவம் எளிதாக அமையும். சிறிது நேரம் இனிமையான இசையை கேட்கலாம். நம்பிக்கையான மற்றும் சந்தோஷமான உறவுகளுடன் உரையாடலாம். இது போன்ற விஷயங்கள் உங்கள் மனதிற்கு புத்துணர்வு கொடுக்கும். பக்திமயமான பாடல்கள் அல்லது கதைகள் கேட்பது கூட நல்ல பலனை தரும்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரிந்து கொள்ளுதல்
எல்லாருக்கும் பிரசவம் என்பது ஒரே மாதிரி அமையாது. உங்களின் குடும்ப வரலாறு, முந்தைய பிரசவ காலம், நீங்கள் உங்கள் உடலை பார்த்து கொள்ளும் விதம் இவற்றை பொருத்து உங்கள் பிரசவ காலம் கடினமாக அல்லது லேசாக இருக்கலாம். எனவே உங்கள் மருத்துவரை அணுகி இது குறித்து உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இது உங்கள் பிரசவ வேதனையை சமாளிக்க உதவியாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இனிமையான சூழல்
உங்கள் பிரசவத்தை எளிதாக்க சரியான சூழலை உருவாக்கி கொள்ளுங்கள். வலி ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவ மனைக்கு செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும். மருத்துவ மனை உங்கள் இடத்திற்கு அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எதாவது சிக்கல் ஏற்பட்டால் அதற்கு தகுந்த சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள எல்லா ஏற்பாட்டையும் தயாராக வைத்துக் கொள்வது அவசியம். பாதுகாப்பான செளகரியமான சூழலை உருவாக்கி கொள்ளுங்கள்.
நகர்தல்
பிரசவ காலம் நெருங்க நெருங்க நீங்கள் அசையாமல் அப்படியே படுக்கையில் இருக்க நினைப்பீர்கள். ஆனால் அது உங்கள் பிரசவ காலத்தை கஷ்டப்படுத்தி விடும். எனவே படுக்கையில் இருந்து எழுந்து லேசாக நடந்து கொடுங்கள், சின்னச் சின்ன வீட்டு வேலைகளை செய்தல் போன்ற வேலைகளைச் செய்யும் போது உங்கள் உடலும் பிரசவத்திற்கு தயாராக மாறும். எனவே எளிதாக குழந்தையை பெற்றுக் கொள்வீர்கள்.
பயத்தை வெளிப்படுத்துங்கள்
உங்களுக்கு முதல் பிரசவமாக இருந்தால் கண்டிப்பாக நிறைய பயமும் சந்தேகமும் உங்கள் மனதில் இருக்கும். அதை அப்படியே மறைத்து வைக்காதீர்கள். இந்த மனநிலையும் உங்கள் பிரசவத்தை கஷ்டப்படுத்தி விடும். எனவே உங்கள் துணை அல்லது அம்மாவிடம் அல்லது மருத்துவர்களிடம் இது குறித்து பேசுங்கள் வெளிப்படுத்தி விடுங்கள். இதனால் உங்கள் பிரசவ காலத்தை பற்றிய ஒரு தெளிவான புரிதல் உங்களுக்கு கிடைக்கும்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடம்
பிரசவ காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி, முதுகுவலி மற்றும் கீழ் முதுகு வலி போன்றவற்றை சூடான ஒத்தடம் மூலம் நிவாரணம் பெறலாம். எனவே நீங்கள் பிரசவத்திற்கு செல்வதற்கு முன்பு இந்த ஒத்தடங்களை நீங்கள் மேற்கொள்ளலாம். இதன் மூலம் அந்த பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து இடையெலும்புகள் விரிவடைந்து பிரசவம் எளிதாக அமையும். அதே மாதிரி ஐஸ் ஒத்தடம் மூட்டுகளில் ஏற்படும் வலியை போக்க உதவும். இதையும் நீங்கள் செய்யலாம். குளிர்ந்த நீரில் துணியை நனைத்து வியர்வை வடியும் முகத்தில், கழுத்து மற்றும் மார்பு பகுதியை துடைக்கலாம்.
மசாஜ் செய்தல்
உங்களது கன்னம் அல்லது தலைமுடி அல்லது தலைப்பகுதியில் லேசாக மசாஜ் செய்து விடலாம். இதன் மூலம் நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட முடியும். ரெம்ப ரிலாக்ஸாகவும் இருப்பீர்கள். இதை உங்கள் துணை அல்லது உங்கள் அம்மா செய்து விடலாம். சில நேரங்களில் எண்ணெய் கொண்டு கூட மசாஜ் செய்து விடலாம்.
வெதுவெதுப்பான குளியல்
நாம் எப்பொழுதும் அதிகமான வேலை செய்து களைத்து வந்தால் வெதுவெதுப்பான நீரில் ஒரு குளியல் போடுவோம். அதே மாதிரி பிரசவ காலத்திலும் இந்த மாதிரியான குளியலை நீங்கள் மேற்கொண்டால் நல்லது. அதிலும் இரவு படுப்பதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் குளித்தால் இரவில் நல்ல தூக்கம் வரும், கை கால்கள் உளையாது. மேலும் உங்கள் அடிவயிற்று பகுதி மற்றும் முதுகு பகுதியில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி வர வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தேய்த்து உங்களால் பொருக்கும் சூட்டில் நீரை ஊற்றி குளித்து வரலாம். இதுவும் உங்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட உதவும். இப்படி செய்யும் போது இடையெலும்புகள் விரிவடைந்து பிரசவத்தை எளிதாக்கும்.
இதனுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் லேசான உடற்பயிற்சி கூட செய்து வரலாம்.

0 Comments
YOUR COMMENT THANKYOU