எல்லா தியான முறைகளுமே அடிப்படையில் பாலுறவு அனுபவத்தை அதில் ஈடுபடாமல் பெறுவதுதான் ..
பாலுறவில் உள்ள மூன்று அடிப்படை விஷயங்களால்
தான் நீ ஒரு ஆனந்தமயமான கணத்திற்கு வருகிறாய் ..
முதலாவது காலமற்ற தன்மை .. நீ இதில் காலத்தை முற்றிலும்
கடந்து விடுகிறாய் .. அங்கு நேரம் என்பது இல்லாமல் போகிறது ..
இந்தக் கணத்தில் இங்கு இப்போது முழு பிரபஞ்ச இருப்பும் குவிந்துள்ளது .. இந்தக் கணம் மட்டுமே நிஜமான கணமாக
மாறி விடுகிறது ..
உன்னால் பாலுணர்வின் துணையின்றி இந்தக் கணத்தை மட்டுமே நிஜமான கணமாக ஆக்க முடிந்தால் இப்போது அங்கு பாலுணர்வு தேவையில்லை ..தியானத்தின் மூலம் அது நிகழும் ..
இரண்டாவது பாலுறவில் முதல் முறையாக நீ உனது ஈகோவை இழக்கிறாய் .. எனவே அதிக ஈகோ உள்ள எல்லோருமே பாலுணர்வுக்கு எப்போதுமே எதிராகத்தான் இருப்பார்கள் ..
பாலுணர்வில் நீ இல்லாமல் போய் விடுகிறாய் .. அதேபோல் மற்றவரும் அங்கு இல்லை ..பழைய இருவரும் காணாமல் போய் விடுகின்றனர் .. அப்போது புதிய விஷயம் வாழ்வில் நுழைகிறது .. அதனால் ஈகோ பயப்படுகிறது ..
பாலுணர்வின் துணையின்றி நீ இல்லாமல் போகும் கணத்திற்கு
உன்னால் வர முடிந்தால் அப்போது அது அங்கு தேவையில்லை ..
மூன்றாவது பாலுணர்வின் போது முதன் முறையாக நீ இயற்கையாக இருக்கிறாய் .. செயற்கைத் தனம் பொய்யானது போய் விட்டது .. போலித் தோற்றங்கள் காணாமல் போய் விட்டன ..
சமூகம் பண்பாடு நாகரிகம் இவற்றை நீ இழந்து விடுகிறாய் ..இயற்கையின் ஒரு பாகமாக ஆகி விட்டாய் ..
நீ வேறு ஏதோ மிகப் பெரியதில் இந்தப் பேரண்டத்தில்
மிதந்து கொண்டிருக்கிறாய் ..
இந்த மூன்று விஷயங்கள்தான் உனக்கு பரவசத்தை கொடுக்கின்றன .. பாலுணர்வு என்பது இயற்கையாக நடக்கும் ஒரு சூழல்தான் ..இந்த அடிப்படை விஷயங்களை நீ உணர்ந்து விட்டாயானால் அவைகளை பாலுணர்வு இன்றியே தியானத்தின் மூலம் உன்னால் உருவாக்கிக் கொள்ள முடியும் ...
ஓஷோ ..
தந்தரா ரகசியங்கள் 3
விஞ்ஞான் பைரவ் தந்த்ராவின்
புதிய விளக்கம் ..

0 Comments
YOUR COMMENT THANKYOU