எந்த கருத்தடை பாதுகாப்பானது? ஆண், பெண்ணுக்காக கருத்தடை சாதனங்கள் என்னென்ன?
ஒவ்வொரு தம்பதியரும் கருத்தடைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். கருத்தடைகள் பல வகைகள் உள்ளன. அதில் எது சிறந்தது என்றும் தெரியாத கருத்தடைகளைப் (types of contraception) பற்றி அறிந்து கொள்வதும் அவசியம். கருத்தடை பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை என்பதற்காகவே இந்தப் பதிவு.
கருத்தடை
குழந்தை உண்டாகாமல் இருக்க தடுக்கும் சாதனையே கருத்தடை. இதில் சில வழிமுறைகளும் உள்ளன. தற்காலிகமான கருத்தடை நீண்டகாலம் உள்ள கருத்தடை நிரந்தர முறைகள் உள்ள கருத்தடை
தற்காலிகமான கருத்தடைகள் என்னென்ன?
‘காண்டம்’ எனப்படும் உறை, கருத்தடை மாத்திரைகள், அவசரநிலை மாத்திரைகள், கருத்தடை பேட்ச், கருத்தடை வளையங்கள், கருத்தடை ஊசி, ஸ்பெர்மிசைட், டயாப்ரம், கேப் ஆகியவை
நீண்ட கால கருத்தடை முறைகள் என்னென்ன?
காப்பர் டி, கான்ட்ராசெப்டிவ் இம்பிளான்ட்
நிரந்தர முறை கருத்தடைகள் என்னென்ன?
டியுபெக்டமி, வாசக்டமி
ஆண்... பெண்… கருத்தடை எவை?
மேலுள்ள அனைத்து முறைகளையும் பார்க்கையில் ஆண்களுக்கானவை ஆணுறையும் வாசக்டமியும்தான். மற்றவை எல்லாமே பெண்களுக்கானவை. பெண்களுக்கு இவ்வளவு கருத்தடை முறைகள் இருக்கின்றன. ஆனால், ஆண்களுக்கோ இரண்டுதான் உள்ளன. இதில் பெண்களே இவற்றை பெரும்பாலும் பயன்படுத்த வேண்டும் என்பது வருத்தத்துற்குரிய செய்தி.
இயற்கையான கருத்தடை காலம்… பொதுவானது அல்ல…
மாதவிலக்குத் தொடங்கிய முதல் 7 நாட்கள்... அடுத்த மாதவிலக்குத் தொடங்குவதன் முந்தைய 7 நாட்கள். இந்த நாட்களில் தாம்பத்ய உறவு கொண்டால், குழந்தை உண்டாகாது. ஆனால், இது பொதுவானதல்ல. எல்லாப் பெண்களின் உடல்நிலையும் ஒன்றாகாது. எனவே இதை நம்பி கருத்தடை இல்லாமல் தாம்பத்ய உறவு மேற்கொள்வதைத் தவிர்க்கலாம்.
ஆணுறை - ஆண்
Condom எனப்படும் ஆணுறை, கருத்தடை முறையில் முக்கியமானது. இது அதிக சதவிகித பாதுகாப்பைத் தரும். காலாவதியான ஆணுறைகளைப் பயன்படுத்த கூடாது. பயன்படுத்தினால் லேட்டக்ஸ் என்ற ரப்பரால் செய்ததால் அந்த உறை கிழிந்துவிடலாம். கர்ப்பம் உண்டாகிவிடலாம்.
டயாப்ரம் - பெண்
பெண்களுக்கு டயாப்ரம் (Diaphragm) எனும் கருத்தடை சாதனம் உள்ளது. சிறிய கப் போல இருக்கும். இந்த சாதனத்தை, தாம்பத்யம் மேற்கொள்ளும் முன், அதாவது 6 மணி நேரத்துக்கு முன் பெண் உறுப்பில் பொருத்த வேண்டும். இது பெண்கள் மத்தியில் பிரபலம் கிடையாது.
அவசர நிலை மாத்திரை - பெண்
உடலுறவு முடிந்த 24 மணி நேரத்துக்குள் சாப்பிட வேண்டியது அவசியம். சில சமயங்களில் இந்த மாத்திரை சரியான நேரத்தில் சாப்பிட்டால்கூட தோல்வி அடையலாம். இதை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு, அதிகமாக பக்கவிளைவுகள் வரும். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உண்ண கூடாது. இதையும் படிக்க : கருத்தரிக்க சரியான நாள் எது? எப்படி கருமுட்டை வெளிவரும் நாளை கணக்கிடுவது?
கருத்தடை மாத்திரை - பெண்
இந்த மாத்திரைகளில் புரோஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜென் ரசாயனங்கள் இருக்கின்றன. இது, முட்டை வெளியேறுதலை தடுக்கும். கருத்தரிப்பைத் தவிர்க்கும். இந்த மாத்திரைகளை மாதவிடாய் முடிந்த 2வது நாள் தொடங்கி, 21 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். இதனால், முட்டை வெளியே வராது. இந்த மாத்திரையை தினமும் குறித்த (சரியான) நேரத்தில் சாப்பிட வேண்டும். ஏதேனும் ஒருநாள் சாப்பிடாமல் தவறவிட்டாலோ, நேரம் மாற்றிச் சாப்பிட்டாலோ இது தோல்வி அடைய வாய்ப்புகள் அதிகம். பெண்களுக்கு பல பக்கவிளைவுகளும் ஏற்படுத்தும். எனவே, பயன்படுத்தும் முன் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெறவது மிக மிக அவசியம்.
ஸ்பெர்மிசைட்ஸ் - பெண்
விந்தணுக்களை அழிக்கும் நுரை இது. நுரை போல உருவாகி விந்தணுக்களை அழிக்கும். இது ஒரு ரசாயனம். பெண்ணின் பிறப்புறுப்பில் வைக்கக்கூடிய வகையில் ஜெல், க்ரீம் எனப் பல வடிவங்களில் வருகிறது. இதைத் தனியாக பயன்படுத்தினால், 50 சதவிகிதம் மேல்தோல்வி அடைய வாய்ப்பு அதிகம். டயாப்ரம் அல்லது கேப் முறையுடன் பயன்படுத்தும்போது நல்ல பலன்தரும்.
கேப் - பெண்
ரப்பரால் ஆன பொருள். இதுவும் டயாப்ரம் போலத்தான் பல்வேறு அளவுகளில் வருகிறது. இதையும் தனியாகப் பயன்படுத்தும்போது 50 சதவிகிதத்துக்கு மேல் தோல்வி அடைய வாய்ப்புகள் அதிகம். ஸ்பெர்மிசைட்ஸுடன் பயன்படுத்தலாம்.
கான்ட்ராசெப்டிவ் பேட்ச் (Patch) - பெண்
இந்த பேட்ச்களை முன்வயிறு, பின்புறம், முதுகு ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் உடலில் ஒட்டிக்கொள்ளலாம். சருமம் வழியாக சென்று, ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் சினைமுட்டை உருவாதலைத் தடுக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதன் மூலம் கர்ப்பம் தடுக்கப்படும் என்கிறார்கள். மாதவிலக்கின் முதல் நாள் முதல் இதை ஒட்டிக்கொள்ள வேண்டுமாம். நம் நாட்டில் இது அதிகமாக பிரபலமாகவில்லை. அனைத்து இடங்களிலும் இது கிடைப்பதும் இல்லை. ஆனால், இதுவும் பாதுகாப்பானது என உறுதியாக சொல்ல முடியாது. இதுவும் ஓரளவு வாய்ப்பு குறைவு, தோல்வி அடையலாம் என்றே சொல்லப்படுகிறது.
கருத்தடை வளையங்கள் - பெண்
‘கான்ட்ராசெப்டிவ் ரிங்’ எனப்படும் இந்தக் கருத்தடை வளையத்தை, மாதவிலக்கின் முதல் நாளே அணிய வேண்டும். இதை அணிகையில் ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் சினைமுட்டை வெளியாதலைத் தடுத்து, கர்ப்பத்தைத் தடுக்கும். இதுவும் தோல்வி அடையும் வாய்ப்பு அதிகம்.
கருத்தடை ஊசி - பெண்
மூன்று மாதத்துக்கு ஒரு முறை போட்டுக்கொள்ளும் ஊசி. உலகம் முழுக்கப் பரவலாகப் பின்பற்றப்படும் முறை. சிலருக்கு இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். 10 சதவிகிதம் தோல்வி அடைய வாய்ப்புகள் உண்டு.
நீண்ட கால முறைகள்
#1. காப்பர் டி - பெண்
மாதவிலக்கின் இறுதி நாளில், பெண்களின் பிறப்புறுப்பின் வழியாக மருத்துவரால் உள்ளே பொருத்தப்படும் கருத்தடைச் சாதனம். பல்வேறு அளவுகளில் கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டது. ஹார்மோன்கள் கொண்ட காப்பர் டி - பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தியாக்கும். விந்துக்கள் எண்டோமெட்ரியத்தை அடைவதைத் தவிர்க்கும் என்கிறார்கள் ஹார்மோன்கள் இல்லாத காப்பர் டி, விந்துக்களின் இயக்கத்தைத் தடுக்குமாம். இதை, விரும்பும்போது அகற்றி, கருத்தரிக்கலாம். மருத்துவமனைகளில் முதல் குழந்தைக்கு பின் இடைவெளி வேண்டும் என நினைப்பவர்கள் இதை அணிந்து கொள்கிறார்கள்.
#2. கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட் - பெண்
சிறிய குச்சி போன்ற கருத்தடைச் சாதனம். 3-5 ஆண்டுகளுக்குப் பலன் தரும். இரண்டு விதங்களில் வருகிறது. பெண்களின் கைப்பகுதியில் பொருத்தப்படும். விரும்பினால் இதை அகற்றிக்கொண்டு கருத்தரிக்கலாம். ஒரு சதவிகிதம் மட்டுமே தோல்வி அடைய வாய்ப்பு உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்.
நிரந்தர முறைகள்
#1.ட்யூபெக்டமி (Tubectomy) - பெண்
இது நிரந்தரமான கருத்தடுப்பு முறை. பெண்களின் ஃபெலோப்பியன் குழாய் கத்தரிக்கப்பட்டு, முடிச்சுப் போடுவார்கள். இதனால் மீண்டும் குழந்தைபெற விரும்பினால் தடையை அகற்றிச் சரி செய்துகொள்ளலாம். சிலருக்கு இந்தக் குழாயை அகற்றிவிடுவார்கள். ஆனால், குழாய் அகற்றப்பட்டால் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. தற்போது லேப்ரோஸ்கோபி முறையில் எளிமையாக இந்த அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.
#2. வாசக்டமி - ஆண்
இது ஆண்களுக்கான கருத்தடை முறை. மிகவும் பரிந்துரைக்கப்படுவது. பெண்களின் கருத்தடை முறைகளில் எண்ணற்ற பக்க விளைவுகள் வருகின்றன. ஆதலால், ஆண்கள் இவ்வகை கருத்தடையை செய்து கொள்ளலாம். இதில் பக்க விளைவுகள் இல்லை. தோல்வி சதவிகிதம் அரிதுதான். இதில், விதைப்பையில் இருந்து விந்து எடுத்துச் செல்லப்படும் பாதை அறுவைசிகிச்சை மூலம் அடைக்கப்படுகிறது. பெண்களுக்குச் செய்யப்படும் அறுவைசிகிச்சையைக் காட்டிலும் இது மிகவும் எளிதானது. இன்றைய காலத்தில், ஆண்களுக்கு தழும்பு இல்லாத, ஏற்படுத்தாத வாசக்டமியும் வந்துவிட்டது. அறுவை சிகிச்சை செய்யும் நேரம், வெறும் 30 நிமிடங்கள்தான். வலி மிகமிகக் குறைவு. அறுவைசிகிச்சை முடிந்த ஒரு மணி நேரத்தில் வீட்டுக்குத் திரும்பிவிடலாம்.
எது பாதுகாப்பான கருத்தடை?
ஆணுறை அணிவது பாதுகாப்பான முறை. காலாவதியான ஆணுறைக்கு, பாதுகாப்பு கிடையாது. மற்றபடி, அதிகபட்சப் பாதுகாப்பு என்றே ஆணுறையை சொல்லலாம். இதை அதிக வெப்பம் இல்லாத இடத்தில் பாதுகாக்க வேண்டும். அது தவறும்போதுமட்டும், ரப்பர் உறை சேதமடைந்து கர்ப்பம் நிகழ்ந்துவிடலாம். பெண்களின் உடல்நலத்தில் அக்கறை கொண்டு, ஆண்கள் வாசக்டமி அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். குழந்தை பெற்றவர்கள், இனி குழந்தை வேண்டாம் என்று திட்டமிட்ட பெண்கள் இந்த ட்யூபெக்டமி சிகிச்சை செய்து கொள்ளலாம். இம்மூன்றுக்கும் பாதுகாப்புத்தன்மை அதிகம்தான்.

0 Comments
YOUR COMMENT THANKYOU