#மாதவிடாய் அல்லது குழந்தையின்மை பிரச்சினைக்கு வைத்தியரை சந்தித்தபோது உங்களுக்கும் PCOS/PCOD பிரச்சினை உள்ளது என்றாரா?
Pcos என்பது ஒரு நோயல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஓமோன் களின் சமநிலை பாதிப்பால் உண்டாகும் ஒரு குறைபாடு மாத்திரமே. உங்களைப்போலவே இன்று உலகெங்கும் அதிகம் பெண்கள் இக்குறைபாட்டினால் அவதியுறுகின்றனர்.
மிகச்சரியான காரணம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றாலும் பல்வேறு துணைக்காரணிகள் மூலம் இது உண்டாவதாக அறியப்படுகின்றது. ஒரு சில வாழ்வியல் மாற்றங்கள் மூலம் இதிலிருந்து மீண்டுவர முடியும்.
இது பற்றி விரிவாக ஆராய முன் PCOS பற்றிய அறிமுகத்தை பார்ப்போம்
நீர்க்கட்டி என்றால் என்ன? (What is PCOS in tamil?)
Polycystic Ovarian Syndrome(PCOS) என்பது சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகியுள்ள ஒரு நிலையாகும். இது PCOS, PCOD, சினைப்பை நோய்க்குறி, சினைப்பை நீர்க்கட்டிகள், கருப்பை கட்டிகள் போன்ற பல பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது.
இது பெண்களின் குழந்தைபேறு காலத்தில் (15 – 44 வயதுவரை) ஏற்படுகின்ற ஒரு நிலைமையாகும். ஒமோன்களின் சமநிலையற்ற தன்மையின் காரணமாக உண்டாகின்றது.
சமநிலையற்ற ஓமோன்கள் கர்ப்பப்பையை தாக்குவதனால் வழமையாக சுரக்கப்படும் ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ரோன் (பெண் ஓமோன்கள்) மற்றும் ஆண்ட்ரோஜன்(ஆண்கள் ஓமோன்) என்பவற்றின் அளவில் மாற்றங்கள் உண்டாகின்றன.
இதன் காரணமாகவே உங்களது மாதவிடாய் வட்டத்தில் குழப்பம் ஏற்படுகின்றது. இது கர்ப்பம் தரிப்பதில் தாக்கத்தை உண்டாக்குவதோடு, சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் சில வகையான புற்று நோய்களும் வர காரணமாகின்றது.
மூன்று பிரதான இயல்புகள் மூலம் இந்நோய் கண்டறியப்படுகின்றது.
சினைப்பையில் நீர்க்கட்டிகள்
அதிகமான ஆண்கள் ஓமோன் – ஆண்ட்ரோஜன்
ஒழுங்கற்ற மாதவிடாய்
சினைப்பையில் உள்ள சிறு சிறு நீர்க்கட்டிகலினுள் முதிர்வடையாத முட்டைக் கலங்கள் காணப்படும். இவற்றை முதிர்வடைய செய்வதற்கு தேவையான அளவு ஓமோன்கள் இல்லாத காரணத்தினால் அவை கருப்பையின் உள்ளேயே தங்கியிருக்கின்ற நேரத்தில் அதை சுற்றி நீர் தேக்கம் அடைகின்றது.
#நீர்க்கட்டி வரக்காரணம் என்ன? (PCOS reason in tamil)
1721ம் ஆண்டிலேயே இத்தாலிய வைத்தியர் அன்டோனியோ வல்லிஷ்னேறி என்பவர் இந்நோய்நிலை பற்றி குறிப்பு எழுதியிருந்தும் இன்றுவரை சினைப்பை நீர்க்கட்டிகளுக்கான தெளிவான காரணம் கண்டறியப்படவில்லை.
ஓமோன்களின் சமமின்மை காரணமாகவே இந்நிலை உருவாவதாக வைத்தியர்கள் நம்புகின்றனர்.
அதிலும் ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண் ஓமோனின் அளவு அதிகமாக இருப்பதே பிரதான காரணம் என்கின்றனர்.
ஆண்ட்ரோஜன் ஓமோன் அளவுக்கதிகமாக சுரக்கப்படுவதற்கு பல்வேறு காரணிகள் பங்களிப்பு செய்கின்றன. அவையாவன:
#இன்சுலின்_மந்த_நிலை:
இன்சுலின் என்பது எமது கணையத்தினால் சுரக்கப்படும் ஒரு ஓமோன் ஆகும். நாம் உண்ணும் உணவிலிருந்து எமது உடற்செயற்பாட்டிற்கு தேவையான சக்தியை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டிற்கு இன்சுலின் அவசியமாகின்றது (இன்சுலின் காரணமாகவே குளுகோஸ் உடைந்து சக்தி வெளியிடப்படுகின்றது).
எனினும் சிலரின் உடற்கலங்களினால் இந்த இன்சுலினை சரியான முறையில் பயன்படுத்த முடியாமல் போகின்றது. இதன் காரணமாக உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் போவதோடு குருதியில் குளுக்கோசின் அளவும் அதிகரித்து காணப்படும். இந்நிலையைக் கட்டுப்படுத்த கணையத்தினால் மேலதிக இன்சுலின் சுரக்கப்படும்.
இவ்வாறு அளவுக்கதிகமாக சுரக்கப்படுகின்ற இன்சுலின் கருப்பையில் ஏற்படுத்தும் தாக்கத்தினால் ஆண்ட்ரோஜன் சுரப்பு அதிகரிக்கின்றது.
அதிக உடற்பருமன் இன்சுலின் மந்த நிலைக்கு பங்களிப்பு செய்கின்றது.
அத்துடன் நீர்க்கட்டி உண்டான பெண்களில் அரைவாசிப்பேர் இளவயது சர்க்கரை நோயினால் பீடிக்கப்படுகின்றனர் .
#அழற்சி
அழற்சி என்பது எமது உடலில் சாதாரணமாக நடைபெறும் ஒரு உயிரியல் எதிர்பாற்றல் செயற்பாடாகும். நோய்த்தொற்று, காயங்கள், நச்சுப்பொருட்கள், கதிரியக்கம் மற்றும் எரிச்சலூட்டிகள் போன்றவற்றினால் இது தூண்டப்படும்.சில உணவுகளும் அழற்சியை உண்டாக்கும்.
இந்த அழற்சி காரணமாகவும் உடலில் சுரக்கப்படும் ஆண்ட்ரோஜன் ஓமோனின் அளவு அதிகரிக்கும். உடற்பருமன் மற்றும் பரம்பரை போன்ற PCOS நோயின் ஆபத்தான காரணிகள் கொண்ட பெண்கள் அழற்சியை உண்டாக்கும் உணவுகளை தவிர்ப்பது நன்று.
#பரம்பரை
தாய் அல்லது தாயின் தாய் அல்லது சகோதரிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கும் இந்நோய் உண்டாகும் ஆபத்து இருக்கின்றது. இந்நோய்க்கான ஆபத்தான காரணிகளில் இதுவே முதன்மையானதாகும்.
#நீர்க்கட்டி அறிகுறிகள் எவை? (PCOS symptoms in tamil)
PCOS இனால் பாதிக்கப்பட்ட பெண்களில் அதிகமானோர் பின்வரும் அறிகுறிகளில் சிலவற்றை மாத்திரம் வெளிக்காட்டுவர். இதில் இரண்டிற்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தாலே கருப்பையில் நீர்க்கட்டி இருப்பதை வைத்தியர் ஊகித்துக் கொள்வார். நோயை நிர்ணயம் செய்ய மேலதிக பரிசோதனைகளை பரிந்துரைப்பார்.
ஒழுங்கற்ற மாதவிடாய் வட்டம்
அதிக குருதிப்போக்கு
அதிக முடி வளர்தல்
முகப்பருக்கள்
நிறை அதிகரித்தல்
தலையிடி
கழுத்து மற்றும் முழங்கை பகுதியில் கருமையாதல்
மலட்டுத்தன்மை
மனச்சோர்வு
பதற்றம்
அதிக கொலோஸ்ரோல்
தூக்கமின்மை
உயர் குருதியழுத்தம்
வழுக்கை விழுதல்
கருச்சிதைவு மற்றும் மாரடைப்புடன் கூடிய கர்ப்பம்
#நீர்க்கட்டிக்கான_மருத்துவம்( PCOS treatment in tamil)
குறிப்பிட்ட ஒரு சிகிச்சை முறை இதற்கென்று இல்லாவிட்டாலும் அறிகுறிகளை சரிசெய்ய சில சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. சிகிச்சை பெறுபவர்களின் நிலையை பொறுத்தே இது தீர்மானிக்கப்படுகின்றது.
ஒருவருக்கு கருத்தரித்தல் தேவையாக உள்ள அதேவேளை பிரிதொருவருக்கு இன்சுலின் தேக்கம்/ மந்த நிலையை(Insulin Resistance) கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். எனவேதான் நோயாளியின் தன்மையை பொறுத்து பின்வரும் சிகிச்சைமுறைகள் பரிந்துரைக்கப்படும்.
#கருத்தடை மாத்திரைகள்:
இவைகள் ஓமோன்களை ஒழுங்குபடுத்துவதோடு உங்கள் மாதவிடாய் வட்டத்தையும் சீர்செய்யும். அதிக முடி வளர்ச்சி, முகப்பரு போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.
#சீனி வியாதிக்கான மாத்திரைகள்:
இவைகள் இன்சுலின் மந்த நிலையை போக்க உதவுவதோடு சுரக்கப்படும் இன்சுலினின் அளவையும் ஒழுங்குபடுத்தும். இது உங்கள் சர்க்கரை வியாதியை தாமதப்படுத்தி உடல் நிறையை பேணவும் உதவும்.
மேற்சொன்ன சிகிச்சை முறைகள் மருத்துவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடைபெற வேண்டும்.
சிகிச்சை பெற்றுக்கொள்ள தவரினால் புற்றுநோய் வரை தாக்கம் உண்டாகும். இந்தமாதிரியான பாரிய விளைவுகளை தவிர்ப்பதற்கு ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
நோய் உண்டாகக்கூடிய ஆபத்தில் இருப்பவர்கள் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாழ்க்கை முறையில் செய்துகொள்ளும் சிறுசிறு மாற்றங்கள்கூட இவர்களுக்கு பாரிய நன்மையளிக்கும்.
அந்த வகையில் இவர்கள் பின்பற்ற வேண்டிய முதல்படி நல்ல உணவுப் பழக்கமாகும்.
#நீர்க்கட்டி உணவு முறைகள் யாவை? (PCOS diet in tamil)
சினைப்பை நீர்க்கட்டி உள்ளவர்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சிகளில் ஒன்றுதான் அவர்களின் உணவுத்தேர்வு. எதை உண்பது எதை தவிர்ப்பது என்ற தெளிவின்றியே அவர்களின் வாழ்கை சென்று கொண்டிருக்கும்.
இன்று அதிகம்பேர் பேசுவது போன்று PCOS உள்ளவர்களுக்கு என்று தனியான உணவு எதுவும் இல்லை. அதேபோல் ஓரே விடயம் அனைவருக்கும் பொருந்தும் என்பதுமில்லை.
எனவே நாம் மேற்சொன்ன நோய்க்காரணிகளை தவிர்ப்பதற்கும் ஆரோக்கியமான உடல்நிறையை பேணுவதற்கும் உங்களுக்கு பயனளிக்கும் உணவுகளையே இங்கு பார்க்கபோகிறோம்.
#மாச்சத்து/காபோவைதரேட்டு
மெதுவாக சமிபாடு அடையும் மாச்சத்து குறைந்த உணவுகளை சாப்பிடவேண்டும். இதனால் குருதியில் சர்க்கரை அளவு அதிகரிக்க அதிக நேரம் எடுப்பதோடு இன்சுலின் மந்த நிலையும் குறைவடையும்.
#முழு_தானியங்கள் – தவிடு நீக்கப்படாத தானியங்கள்
கோதுமை
சிவப்பரிசி
கேழ்வரகு (குரக்கன்) (Finger Millet)
ஓட்ஸ்/ காடைக்கண்ணி
புல்லரிசி (rye)
வாற்கோதுமை (barley)
தினை
கம்பு (Millet)
மற்றும் பதப்படுத்தாத/ தீட்டாத தானியங்கள் முதலியன
#விதைகள்
வாதுமைக் கொட்டை (Walnuts)
பாதாம் (Almonds)
பிஸ்தா(Pistachios)
ஆளி விதை (Flax seeds)
சியா விதைகள் (Chia Seeds)
சூரியகாந்தி விதை (Sunflower seeds)
#பழங்கள்
பப்பாளிப்பழம்
அன்னாசிப்பழம்
மாதுளம்பழம்
ஆப்பிள்
உலர்திராட்சை
திராட்சை
ஆனைக்கொய்யா/ வெண்ணைப் பழம் (Avocado)
#நார்ப்பொருள்_நிறைந்த_காய்கறிகள்
பூசணிக்காய்
வெள்ளரிக்காய்
புடலங்காய்
அவரை இனங்கள்
குடை மிளகாய்
#அழற்சி_எதிப்பு_உணவுகள்
ஆண்ட்ரோஜன் சுரப்பு அதிகரிப்பிற்கு அழற்சியும் ஒரு காரணியாகும். எனவே PCOS உள்ளவர்கள் அழற்சியை குறைக்கும் உணவுகளையே உண்ண வேண்டும்.
#மீன்கள்_மற்றும்_இறைச்சிகள்
சாளை/மத்தி/சூடை (Sardines)
ஐய்லா/சீலா/வஞ்சிரம் (Mackerel)
காளா/கோரா/கொண்டை (Salmon)
சூரை(Tuna)
கோழியிறைச்சி
வான்கோழி இறைச்சி
#பெர்ரி_வகைப்_பழங்கள்
சேலாப்பழம் (Cherry)
நாவப்பழம் (Blackberries)
நெல்லி (Blueberries)
திராட்சை (Grapes)
#இலைக்கறிகள்
முருங்கை கீரை
சுருள் தட்டை கீரை/பரட்டைகீரை(Kale)
பசளிக் கீரை(Spinach)
பச்சைப்பூக்கோசு(Broccoli)
பூக்கோசு(Cauliflower)
#குறைந்த கொழுப்புள்ள பொருட்கள்
ஒலிவ் எண்ணெய்
தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்
ஆளி விதை எண்ணெய்
தயிர்/மோர்
யோகட்
இந்த உணவுகளை தெரிவு செய்து உண்பதொடு உங்களது சாப்பாட்டு முறையிலும் மாற்றத்தை செய்வது அவசியமாகும்.
அதாவது வழமையான 3 வேளை உணவு என்பதற்கு பதிலாக 5 வேளை உணவு முறையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 3 வேளையும் உண்ணும் உணவை பங்கிட்டு 5 வேளைக்கு உண்ணுங்கள். இது உங்களின் இன்சுலின் செயற்பாட்டை அதிகரிக்க உதவும்.
உங்களது உணவுத்தெரிவுக்கு பயன்படும் மேலும் சில குறிப்புகள்:
எப்போதும் சுடு நீரை பருகுங்கள்
இனிப்பிற்கு தேன் அல்லது நாட்டு சக்கரையை பயன்படுத்துங்கள்
முட்டையின் வெள்ளைக்கருவை மாத்திரம் எடுக்க முடியும்
இஞ்சி, மஞ்சள், கறுவா போன்ற மசாலாப் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்
பால் தேநீரை தவிர்த்து பசும் தேநீர்(Green tea)யை பருகுங்கள், தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் ஒரு நாளைக்கு ஒரு தடவை மாத்திரம் பால் தேநீர் குடிக்கலாம்.
முடிந்தளவு வீட்டில் தயாரித்த உணவுகளை உண்ணுங்கள்
நீராவியில் வேகவைத்த உணவுகள் நல்லவை.
இதற்கு மேலதிகமாக நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை கவனித்தால்,
PCOS உள்ளவர்கள் #தவிர்க்க வேண்டிய உணவுகள்
வெள்ளை சீனியை முற்றாக தவிர்த்து விடுங்கள்
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் மற்றும் கடுகு எண்ணெய்
பேக்கரி உணவுகள்
பட்டாணி கடலை
உருளைக்கிழங்கு
செயற்கை சுவையூட்டிகள்
நெய்
பாலாடைக்கட்டி
சோயா தயிர் மற்றும் பால்
அனைத்து வகையான துரித உணவுகள்
சிவப்பு இறைச்சி வகைகள்
பதப்படுத்திய உணவுகள்
சோடா
பிஸ்கட்
கேக்
ஐஸ் க்ரீம்
இவைகள் உங்கள் இன்சுலின் மந்தநிலை, அழற்சி மற்றும் இரத்த கொழுப்பு என்பவற்றை அதிகரிக்கும்.
PCOS இனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிலிருந்து மீண்டுவர சரியான உடற்திணிவு சுட்டியை (Body Mass Index – BMI) பேணிக்கொள்வது மிக அவசியமாகும்.
அந்தவகையில் நாம் மேற்சொன்ன உணவு முறைகளை பின்பற்றுவதோடு தினசரி உடற்பயிற்சி என்பதும் தவிர்க்க முடியாததொன்றாகும்.
#நீர்க்கட்டி_கரைய_உடற்பயிற்சிகள் (PCOS exercise in tamil)
சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினை மாத்திரமல்லாமல் இன்று நாம் எதிகொள்ளும் அதிகமான உடல்நல பிரச்சினைகளுக்கு சீரான உடற்பயிற்சி நல்லதொரு தீர்வை தரும்.
உடல் எடையை குறைக்க நீங்கள் தீவிர பயிற்சிகள் செய்ய வேண்டியதில்லை. ஒரு மாதத்திற்கு ஆரோக்கியமான முறையில் 5 அல்லது 6 கிலோ நிறையை குறைத்தல் எனும் இலக்கை வைத்து சிறிது சிறிதாக ஆரம்பிக்கலாம்.
அந்தவகையில், உங்களுக்கு பயனளிக்கும் சில உடற்பயிற்சிகளாவன
#நடைப்பயிற்சி
காலை வேளையில் மேற்கொள்ளல்
30 நிமிடங்கள் போதுமானது
தளர்வான ஆடைகள் அணிவது நல்லம்
இளம்சூடான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்துவிட்டு நடைப்பயிற்சியை மேற்கொள்வது பயனளிக்கும்.
நன்கு காற்றோட்டமுள்ள இடத்தில் நடத்தல் வேண்டும்
தலையை நேராக வைத்து, கைகளை முன்னும் பின்னும் சீராக விசிக்கியவாறு நடக்க வேண்டும்.
மூச்சிறைக்காதவாறு முலுச்சுவாசம் செய்ய வேண்டும்.
#மெல்லோட்டம்
மருத்துவரின் ஆலோசையின்படி செய்ய முடியும்.
நடைப்பயிற்சியில் பின்பற்றிய விடயங்களை கவனத்தில் கொள்ளவும்.
பயிற்சி தொடங்கமுன் தசைகளை இயங்க செய்ய கால், கைகளை நீட்டி அசைத்து “Warm up” செய்ய வேண்டும்.
கரடு முரடான இடங்களை தவிர்க்க வேண்டும்.
எடுத்த உடனேயே வேகமாக ஓடக்கூடாது. இது உங்கள் முழங்கால்களை பாதுகாக்கும்.
#சைக்கிள்_ஓட்டம்
உயரத்திற்கு பொருத்தமான சைக்கிளை தெரிவு செய்வது மிக முக்கியம்.
காட் தசைகள் மற்றும் முழங்கால் என்பன வலிமை பெறும்
வேகத்திற்கு ஏற்றவாறு கலோரிகள் எரிக்கப்படும்.
முதுகுவலி வராமல் இருக்க உங்கள் முதுகு களை எப்போதும் நேராக வைத்துக்கொள்ள வேண்டும்.
#நீச்சல்_பயிற்சி
முழு உடலும் பயன்பெறும் ஒரு உடற்பயிற்சியாகும்
கை மற்றும் கால் தசைகள் அனைத்தும் வலுப்பெறும்.
செரிமானத்தை அதிகரிப்பதனால் பசியின்மை மற்றும் மலச்சிக்கல் என்பவற்றிற்கு நிவாரணமளிக்கும்
ஓமோன்களின் சமநிலைக்கு உதவும்.
அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
#கயிறடித்தல்
உங்களது உயரத்திற்கு பொருத்தமான அளவுகொண்ட கயிறு அவசியம்
காற்றோட்டமுள்ள திறந்த வெளியில் செய்வது அதிக பயனளிக்கும்
அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால் உடலிலுள்ள மேலதிக கொழுப்புகள் படிப்படியாக கரைய தொடங்கும்
தலை மற்றும் முதுகு என்பவற்றை நேராக வைத்துக் கொள்ள வேண்டும்
உடல் உறுப்புகளுக்கு சீரான இரத்த ஓட்டம் கிடைப்பதனால் ஓமோன்களின் அளவு ஒழுங்கு படுத்தப்படும்
இவ்வாறான உடற்பயிற்சிகள் சாதாரணமாகவே நம் அன்றாட வாழ்க்கையில் செய்யக்கூடியவை. எனவே இவற்றை தினமும் கடைப்பிடிப்பது அவசியமாகும். எப்போதுமே சீரான உடற்பயிற்சியே நன்மையளிக்கும்.
உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் காலப்பகுதியில் உங்களது உடல் எடை மற்றும் உடற் திணிவுச் சுட்டி என்பவற்றை வாரம் ஒரு முறையாவது குறித்து சரிபார்த்துக் கொள்வது உங்களது தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.
சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்காகவே மேற்சொன்ன நடவடிக்கைகளை நாம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிணைத்து கடைபிடிப்பது அவசியமாகின்றது.
எனினும் இன்று அதிகம் பெண்கள் பிசிஓஎஸ் பிரச்சினையை அறிந்த உடனேயே சத்திரசிகிச்சை மூலம் நீர்க்கட்டிகளை அகற்றிக் கொள்கின்றனர். இது இவர்களுக்கான நிரந்தரத் தீர்வாகாது.
நாம் மேலே கூறியவாறு நீர்க்கட்டிகளை உண்டாக்கும் காரணிகளை சரி செய்து கொள்வது உங்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தரும்.
அத்துடன் சினைப்பை நீர்க்கட்டி என்பது பாரதூரமான ஒரு நோய் என்னும் மனநிலையில் இருந்து விடுபட்டு முறையான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் ஆரோக்கியமான உடலைப் பேணிக் கொள்வது உங்களுக்கு பாரிய மன உளைச்சலை உண்டாக்கிய மாதவிலக்கு மற்றும் குழந்தையின்மை போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU