குழந்தையின்மைக்கான மருத்துவ சிகிச்சை இப்போ மிகப்பெரிய பிசினஸ். தலைவலி, காய்ச்சல் மாதிரி, மலட்டுத்தன்மையும் ரொம்ப சாதாரணமான விஷயமாக மாறினதுதான் காரணம். சாப்பிடற சாப்பாடு, வசிக்கிற இடம், சிந்தனைனு எல்லாமே சுத்தமா இருந்த அந்தக் காலத்துல மலட்டுத்தன்மைங்கிறது அபூர்வமானதா இருந்தது. இன்னிக்கு சுவாசிக்கிற காற்று, குடிக்கிற தண்ணீர், சுற்றுப்புறம், மனசு.... எல்லாத்துலயும் மாசு. நோய்கள் பெருகப் பெருக, மலட்டுத்தன்மையும், அதுல ஒண்ணாயிடுச்சு. முடிஞ்சவரை சுத்தமான சூழல்ல இருக்கிறது, நல்ல சிந்தனை, ஆரோக்கியமான சாப்பாடுனு சில விஷயங்கள் மூலமா, இந்தப் பிரச்சினைலேர்ந்து ஓரளவு விலகியிருக்கலாம். சாப்பாட்டுக்கும் மலட்டுத் தன்மைக்கும் என்ன சம்பந்தம்னு பலர் கேட்லாம். நிறைய இருக்கு!
இதய நோய், நீரிழிவு, மெனோபாஸ், ஹார்மோன் கோளாறு உள்ளவங்களுக்கெல்லாம் தாம்பத்ய உறவுல சிக்கல் இருக்கிறதோட, மலட்டுத்தன்மை பாதிக்கவும் வாய்ப்புகள் அதிகம். மத்தபடி சின்ன வயசுலேர்ந்தே சரிவிகித சாப்பாடு சாப்பிடறவங்களுக்கு பிற்காலத்துல மலட்டுத்தன்மையால பாதிக்கப்படற அபாயம் கம்மி. அதாவது வைட்டமின் சி-யும், ஃபோலிக் அமிலமும் அதிகமா உள்ள பழங்கள், காய்கறிகளைச் சேர்த்துக்கிறவங்களுக்கு மலட்டுத்தன்மை பாதிப்பு கம்மி.
மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்ல முதலிடம், கொழுப்பு நிறைஞ்ச உணவுகளுக்கு. சின்ன வயசுலயே ஜங்க் உணவுகளுக்குப் பழகறாங்க. உடற்பயிற்சிங்கிறதே இல்லாத மந்தமான வாழ்க்கை முறை.... தவறான சாப்பாடு உதாரணத்துக்கு கார்போஹைட்ரேட் அதிகமுள்ள சாப்பாடு... இது எல்லாமே செக்ஸ் உணர்வுகளைக் குறைச்சு, மலட்டுத்தன்மைல கொண்டு போய் விடும்.
அதிகக் கொழுப்புள்ள உணவு, இதயத்துக்குப் போகிற ரத்தக் குழாய்கள்ல அடைப்பை உண்டாக்கி, ஆண் ஹார்மோனை சரியா சுரக்க விடாமத் தடுத்து, தாம்பத்ய உறவுல ஆர்வத்தையும் குறைக்கும். கொழுப்புங்கிறது ஆணுக்கு மட்டுமில்லை. பெண்ணுக்கும் பிரச்சினைதான். பெண்களைப் பொறுத்தவரை அதிகக் கொழுப்பும் ஆபத்து... கொழுப்பே இல்லாத உணவும் ஆபத்து! அதிகக் கொழுப்பு இதயத்துக்குக் கேடு. ஓரளவு கொழுப்பு இருந்தா தான், பெண்களோட உடம்புல பிரதான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் சுரப்பு சரியா நடக்கும். தினசரி 20 கிராம் கொழுப்பு பெண்களுக்குப் போதுமானது. அதுகூட இல்லாத உணவு. அந்த ஹார்மோன் சுரப்பை பாதிக்கும். மலட்டுத்தன்மை மட்டுமில்லாம, மத்த பிரச்சினைகளுக்கும் காரணமாயிடும் இது.
மலட்டுத்தன்மை வராமலிருக்கவும்,
ஆரோக்கியமான தாம்பத்ய உறவுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வைட்டமின் சி பெரியளவுல உதவும். ஆணுக்கு விந்தணு உற்பத்திக்கும், பெண்ணுக்கு கருமுட்டை உற்பத்திக்கும் உதவும். எலுமிச்சை, ஆரஞ்சுனு சுலபமா கிடைக்கக்கூடியது வைட்டமின் சி. சிகரெட், குடிப்பழக்கம் உள்ள ஆண்களுக்குக் கூடுதல் வைட்டமின் சி தேவை. உணவு மூலமாக எடுக்கிறது போக, மாத்திரை, மருந்துகளாகவும் எடுத்துக்க வேண்டியிருக்கும்.
குடமிளகாய், கிவி, முலாம்பழம், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, பிராக்கோலி, பட்டர் ஃப்ரூட் - இதெல்லாம் ஆரோக்கியமான உயிரணு உற்பத்திக்கும், விந்துக்குழாய் அடைப்பு சரியாகவும் உதவக்கூடிய உணவுகள். பெண்களுக்கு வைட்டமின் சி தவிர, ஃபோலிக் அமிலமும் அவசியம். பிறக்கப் போற குழந்தை எந்தக் குறைகளும் இல்லாம, நல்லபடியா பிறக்கறதைத் தீர்மானிக்கிறது இந்த ஃபோலிக் அமிலம். கீரைல எக்கச்சக்கமா இருக்கு இது. அதனாலதான் கர்ப்ப காலத்துல பெண்களை தினம் கீரை சேர்த்துக்கக் கட்டாயப்படுத்தறோம்.
கல்யாணமாகி பல காலம் காத்திருந்து, அப்புறம் குழந்தையில்லையேங்கிற கவலையோட டாக்டர் டாக்டரா பார்க்கிறதுக்குப் பதில், முன்கூட்டியே கவனமாக இருக்கலாம் இல்லையா?
குழந்தை வேணும்னு முடிவு செஞ்சதுமே, குறைஞ்சது 3 மாசத்துக்கு முன்னாடியே இந்த விஷயங்களை கவனத்துல வச்சுக்கிறது சீக்கிரமே உங்க வீட்ல குழந்தை சத்தம் கேட்க வைக்கும்!

0 Comments
YOUR COMMENT THANKYOU