சில பெண்கள் பூப்பெய்திய காலம் தொடங்கி இறுதி மாதவிடாய்க் காலம்வரை சுமார் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளாக வயிற்றுவலி, வயிறு உப்புசம், தேவையில்லாமல் எரிச்சல்படுதல் போன்ற அவதிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆளாகின்றனர். இதுதான் மாதவிடாய்க்கு முன்புவரும் அவதி எனப்படுகிறது.
மாதவிடாய் வருவதற்கு முன்பு பெண்களின் உடலில் இருக்கும் ஹார்மோன்களின் அளவில் உண்டாகும் மாற்றமே இதற்குக் காரணமாகும். இருபது முதல் முப்பது வயதுப் பெண்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 150க்கும் மேற்பட்ட அறிகுறிகளைக் கொண்ட இது ஒரு சிக்கலான பிரச்சினையாகும். ஒவ்வொரு பெண்ணும் அவளது மனநிலைக்கேற்ப இந்த அவதிகளை அனுபவிக்கிறாள். இறுதி மாதவிடாய்க் காலம் வரும்வரை இந்த அவதியிலிருந்து முற்றிலும் விடுதலை பெறமுடியாது. இதனை சமாளிக்க சில வழிமுறைகள் உள்ளன.
வைட்டமின் B நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டால் மாதவிடாய்க்கு முன்பு வரும் அவதிகளான மனநிலையில் மாற்றம், வயிற்று உப்புசம் போன்றவற்றைக் குறைக்கும். கோழி இறைச்சி, சிலவகை மீன்வகைகளில் வைட்டமின் B அதிகம் இருக்கிறது. வாழைப்பழத்தில் வைட்டமின் B ஏராளம் இருக்கும்.
மாதவிடாய்க்கு முன் உப்பலாகிவிட்டது போல் உணரப்படும். எனவே மாதவிடாய்ப் பிரச்சினை உள்ளவர்கள் உப்பைக் குறைக்க வேண்டும்.
காபி, கோலா, சாக்கலேட் ஆகியவற்றிலுள்ள கஃபைன் ஒத்துக்கொள்வதில்லை. அவர்கள் காப்பி குடித்தால் பாதிக்கப்பட்டு எரிச்சல் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவர். மார்பகத்தில் வலி உணர்வர். இத்தகையோர் மாதவிடாய்க்குச் சில நாள்கள் முன்பிருந்தே காப்பி பருகாமலிருக்கலாம்.
நிறையத் தண்ணீர் குடித்தால் கீழ்வயிற்றில் ஏற்படும் உப்புசம் போன்ற உணர்வு நீங்கும். ஏனெனில் தண்ணீர் பருகினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். இதனால் உடல் கழிவுகள் அகன்றுவிடும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU