'பிடித்திருக்கிறதா' என்று கூட கேட்காமல் வலுக்கட்டாயமாக தள்ளிவிடப்பட்டவள்.
படுக்கறை சமாச்சாரங்களை செவிவழியாக கேட்கும் வயதில், என்ன நடக்கிறது என்று புரியுமுன்
கட்டாயப்படுத்தி கண்ணீர் பக்கவாட்டில் ஓட வீழ்த்தப்பட்டவள்.
குழந்தையை போல துள்ளி குதித்து ஆடிப்பாடி திரியும் வேளையில் இரு குழந்தைகளுக்கு பாலூட்டி,
நீதான் இனி இவர்களை பார்க்க வேண்டும் என்று தியாக தீபம் சூட்டி திணிக்கப்பட்டவள்.
கூடப் படித்த தோழிகள் மேலும் படித்து கை நிறைய சம்பளம் வாங்க ஓடும் வேளையில்,
தன் பிள்ளைகள் பள்ளிகள் அனுப்ப அலாரம் வைத்து அரக்கபரக்க எழுந்து காலை சிற்றுண்டி செய்து பள்ளி வாகனத்தை நோக்கி ஓடியவள்.
நாற்பது வயது நெருங்கிவிட்டது,
இந்த வயதில் அடுத்த அத்தியாயத்தை நோக்கி ஓடும் பலரை பார்த்து ஏங்காமல்,
பெரு மூச்சு விடாமல்,
தன் வயதுக்கு வந்த பிள்ளைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த பெரிய பாரத்தை தன் தலையில் தானே உட்புகுத்தியவள்.
எந்த பிரச்சினை வந்தாலும், என்ன ஆனாலும்,
சரி ஆனது ஆயிற்று,
இனி நீதான் அனுசரித்துச் செல்ல வேண்டுமென அறிவுரைகளை தனக்கு மட்டும் வாங்கிக்கொண்டவள்.
தன் இருபத்து நான்காவது திருமண நாளில் எல்லோரிடமும் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
என்பதனை பெற்று, மனதுக்குள் சிரித்து,
அன்றிரவு தனியாக
அதுவரை நடந்த எல்லாவற்றையும் அசைப்போட்டு தலையணையிடம் தர்க்கம் செய்துக்கொண்டிருப்பவள்.

0 Comments
YOUR COMMENT THANKYOU